கடந்த 13ஆம் திகதி சித்திரை புத்தாண்டு தினத்தன்று வலி வடக்கில் 683 ஏக்கர் காணிகள் பொது மக்களிடம் மீள கையளிக்கப்பட்டிருந்தன. இந்நிலையில் விடுவிக்கப்பட்ட காணிகளிலே அம் மக்கள் மீளக் குடியேற்றங்களை மேற்கொள்வதில் இம் மூன்று இராணுவ முகாங்களும் இடையூறாக இருப்பதாக பொது மக்களால் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
குறிப்பாக மாவிட்டபுரம் கட்டுவன் மயிலிட்டி வீதியினை இணைக்கும் பிரதான பாதையில் வீதியின் நடுவில் 40 ஏக்கர் பரப்பில் ஒரு இராணுவ முகாமும், அதேபோன்று கட்டுவன் மயிலிட்டி வீதியில் 7 கிலோ மீற்றர் நீளமான பாதையிலும், ஜே.240 கிராம சேவகர் பிரிவின் தென்மயிலை பகுதியிலுமாக மூன்று இராணுவ முகாம்களும் காணப்படுகின்றன.
இந்நிலையிலேயே இந்த இராணுவ முகாங்கள் காணப்படுவதானால் விடுவிக்கப்பட்ட காணிகளுக்குள்ளும் மக்கள் செல்வதற்கான பாதைகள் துண்டிக்கப்பட்டுள்ளதாகவும் சில இடங்களில் வேறொருவரது காணிகளினூடாகவே செல்ல வேண்டி இருப்பதாகவும் பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.
எனவே மேற்படி மூன்று இராணுவ முகாம்களும் விரைவாக விடுவிக்கப்பட்டாலேயே மக்களிடம் கையளிக்கப்பட்ட காணிகளில் மக்கள் விரைவாக மீளக் குடியேற முடியும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.